From Parish Priest’s Desk

மொளச்சூர் புனித சூசையப்பர் பங்கிலுள்ள அனைவருக்கும் வணக்கத்தையும், வாழ்த்துகளையும்
உரித்தாக்கிக்கொள்கின்றேன்.

நாம் வாழும் பேரண்டமானது விண்மீன்கள் நிறைந்த பால்வெளி மண்டலங்களாலும் எண்ணற்ற கிரகங்களாலும் காணப்படுகிறது. இவற்றின் தோற்றத்தைப் பற்றியோ உயிரின் ஆரம்பத்தைப் பற்றியோ இதுவரை ழுற்றிலும் ஊர்ஜிதமான, முடிவான கருத்தானது எங்கும் எவராலும் பிரகடனப்படுத்தப்படவில்லை. கடவுளால்தான் இப்பேரண்டமானது படைக்கப்பட்டது;   உயிரின் துவக்கத்திற்கும், உயிர்வாழ்க்கைக்கும் காரணம் கடவுளே என மொழிந்து யூத, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்கள் மக்களின் உள்ளங்களில் இறைநம்பிக்கையை விதைப்பது ஒருபுறமிருக்க, இவ்வுலகமானது தானாகவே தோன்றியது எனவும் உயிருக்கும், உயிர்வாழ்க்கைக்கும் தொடக்கம் இயற்கையின் விந்தையே என்றுரைத்து
விஞ்ஞானமானது ஊகங்களின் அடிப்படையிலான மானுடப் பகுத்தறிவின் உச்சத்தை புதிய புதிய தகவல்கள் மூலம் உலகிற்கு வெளிப்படுத்திவருகின்றது.

ஆக, இறைநம்பிக்கைக்கும் விஞ்ஞான அறிவிற்கும் இடையே முரண்பாடு இருப்பதாகத் தோன்றினாலும் இரண்டும் கருத்துச்செறிவுள்ள சிந்தனைகள், ஆய்வுகள், கோட்பாடுகள் வாயிலாக ஒன்றையொன்று நிறைவுபடுத்துகின்றன என்பதுதான் முழுமையான உண்மை. ஏனென்றால், ஒருசில கருத்துப்பகிர்வு மற்றும் கோட்பாடுகளுக்கிடையே சற்று இழுபறியானது மானுட வரலாற்றில் நிலைத்திருந்தாலும் அத்தகைய கருத்துத் தெளிவின்மையும் இழுபறியும் காலப்போக்கில் மிகத் தெளிவான, தீர்க்கமான மற்றும் இணக்கமான முடிவுகளையே முன்னிறுத்தியுள்ளன. பல
மதங்களைச் சார்ந்த இறைநம்பிக்கையாளர்களும், பலதரப்பட்ட விஞ்ஞானிகளும் இத்தகைய ஒருங்கிணைந்த தன்மையை வலுப்படுத்தியும் வருகின்றனர்.

எங்ஙனம் படிப்படியான புதுமையான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆய்வுகள் அனைத்தும் புவி மற்றும் மானுட வரலாற்றின் தோற்றம் பற்றிய பழைய கோட்பாடுகளை நிறைவு செய்திருக்கின்றனவோ, அங்ஙனமே இறைநம்பிக்கையின் அடிப்படையிலான தத்துவங்கள், வெளிப்பாடுகள் மற்றும் கோட்பாடுகள் எல்லாமே படிப்படியான ஒருங்கிணைந்த இறையனுபவ ஆன்மீக வளர்ச்சியின் நிறைவினையே பிரகடனப்படுத்தி வருகின்றன.

ஆகவேதான், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 13.2.2015 அன்று கத்தோலிக்கக் கல்விப் பணிக்கான பேராயத்திற்கு நிகழ்த்திய உரையில், தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும் இன்றைய பல்தரப்பட்ட கலாச்சார மற்றும் வரலாற்று காலச் சூழலில் கத்தோலிக்கக் கல்விப்புகட்டுதல் திருஅவையின் மிக முக்கியமான சவால்களுள் ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டி மூன்று அம்சங்களைக் கருத்திற்கொள்ள பங்கேற்பாளர்களுக்கு முன்மொழிந்துள்ளார். அவை: 1. கல்விப் புகட்டுதலில் உரையாடலின் அவசியம். 2. பயிற்சியாளர்கள் தரமிக்கத்தயாரிப்பை மேற்கொள்ளுதல்.3. கல்வி நிறுவனங்களில்அறிவியல், கலாச்சாரம் மற்றும் எல்லா துறைகளிலும் நற்செய்தியானது உயிரோட்டமுள்ளவிதத்தில் பரவியிருப்பதை எடுத்துரைப்பது கல்வி நிறுவனங்களின் கடப்பாடு. மேலும், இதை முன்னிட்டு அனைவரும் ஒருங்கிணைந்து நல்ல ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டறிந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் மாணவர்கள் சந்திக்கும் குறிப்பிடத்தக்கச்

சவால்களில் மாணவர்களுக்கு உதவிட அழைப்புவிடுத்துள்ளார். அத்தகையச் சவால்களுள் முதலாவதாக, இறைநம்பிக்கைக்கும் விஞ்ஞான அறிவிற்கும் இடையே முரண்பாடு நிலவுவதாகவும் விஞ்ஞானம் கற்பிப்பதையே மெய்யென எண்ணி இறைநம்பிக்கையை வெறும் கற்பனை என கருதும் போக்கு பல மாணவர்களிடையே நிலவுவதாகவும் அவர்களைப் பயிற்றுவிக்கும் வண்ணம் அவர்கள் ஆர்வத்துடன் ஏற்க, தக்கத் தகுந்தச்சான்றுகளை வழங்கிடத் தேவையான ஆதாரங்களைத் திரட்டிட பணித்துள்ளார்.

இதை நடைமுறைப்படுத்தி, விசுவாச வாழ்வில் மேலும் வளர்ச்சியுற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

அருட்திரு பிரான்சிஸ் போர்ஜியா, CM
பங்குத்தந்தை

“பங்கு என்பது தனித் திருச்சபையில் நிலையான முறையில் நிறுவப்பட்டுள்ள கிறிஸ்தவ விசுவாசிகளின் ஒரு
குறிப்பிட்ட சமூகமாகும். அதன் மேய்ப்புப்பணிப் பொறுப்பு மறைமாவட்ட ஆயரின் அதிகாரத்தின்கீழ், ஒரு
பங்குக்குருவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் அதற்கு உரிய மேய்ப்பராவார்.” – திருச்சபைச் சட்டம் 515:1

“மறைமாவட்ட ஆயர் தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன் ஒரு பங்கைத் திருப்பணியாளர்களின் ஒரு துறவற
சபையிடம் அல்லது திருப்பணியாளர் மறைதூதுப்பணி வாழ்வுச் சமூகத்திடம் அந்தச் சபையின் அல்லது சமூகத்தின்
ஆலயத்தில் நிறுவிக்கூட ஒப்படைக்கலாம்.” இத்தகைய பங்கின் ஒப்படைப்பு நிரந்தரமாக அல்லது வரையறுக்கப்பட்ட
ஒரு காலத்திற்கு அமையலாம். – திருச்சபைச் சட்டம் 520:1,2

“பங்குக்குரு பங்கில் வாழ்பவர்களுக்கு இறைவார்த்தையை முழுமையாக அறிவிப்பதை உறுதி செய்யக்
கடமைப்பட்டுள்ளார். ஆகலே கிறிஸ்தவ விசுவாசிகளின் பொதுநிலையினர், குறிப்பாக ஞாயிறு மற்றும் கடன்
திருநாள்களில் மறையுரை மற்றும் மறைக்கல்விப் பயிற்சி வழியாக விசுவாச உண்மைகளில் பயிற்றுவிக்கப்படுவதை
அவர் கவனிக்கவேண்டும். நற்செய்தி மனநிலையை மேம்படுத்தும் பணிகளை, சமூக நீதியுடன் தொடர்புடையவை
உட்பட, அவர் பேணிவளர்க்கவேண்டும்.” – திருச்சபைச் சட்டம் 528:1

“தமது மேய்ப்புப்பணியை ஊக்கமுடன் நிறைவேற்றும் பொருட்டுப் பங்குக்குரு அவரது கண்காணிப்பில்
ஒப்படைக்கப்பட்டுள்ள விசுவாசிகளை அறிய முயலவேண்டும். ஆகவே அவர்களது குடும்பங்களைச் சந்தித்து
அவர்களின் அக்கறைகளையும் கவலைகளையும் மிகவும் குறிப்பாக அவர்களது மனத்துயரங்களையும்
பகிர்ந்துகொண்டு ஆண்டவரில் அவர்களைத் தேற்ற வேண்டும்.” – திருச்சபைச் சட்டம் 529:1

“திருச்சபையின் பணியில் கிறிஸ்தவ விசுவாசிகளான பொதுநிலையினர் கொண்டுள்ள பங்கை, சமய நோக்கங்கள்
கொண்ட அவர்களின் சங்கங்களைப் பேணிவளர்ப்பதன் மூலம் அங்கீகரிக்கவேண்டும்; மேலும் அதை
மேம்படுத்தவேண்டும்.” – திருச்சபைச் சட்டம் 529:2