Bos Secours Convent

அடைக்கல அன்னை சபையினரின் பணிகள்

இறைவனைச் சார்ந்து வாழ இறைபிரசன்னத்தை இறைதிருவுளத்தை தனது வாழ்விலும் பணியிலும் பிரதிபலித்து இதன் வழி இலக்கு மக்களின் வாழ்வில் ஒளியேற்றி இறைவனை கண்டுணர்ந்துகொள்ள அழைக்கப்பட்ட புனித பிரான்சிஸ்கன் சகோதரிகளின் அடைக்கல அன்னை சபை சகோதரிகள் மொளச்சூர் மண்ணில் காலூன்றி 08.12.1969-ம் நாளிலிருந்தே மக்களுடன் இயைந்த வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.
மக்களின் தேவைகளை சமூக, உடல், கல்வித்தேவைகளில் அக்கறை கொண்டு மக்களின் நிலை உயர்த்த மொளச்சூர் மற்றும் அருகாமையிலுள்ள கிராமங்களில் சமூகப்பணி என்ற மக்கள் மேம்பாட்டுப்பணியில் ஈடுபட்டனர், குழந்தைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்தில் பெரும்பணியாற்ற தாய்சேய் நலத்திட்டங்களில் பங்கேற்றனர். இப்பயனாளிகளின் உடல் நலத்தில், குடும்ப நலத்தில் கருத்தை செலுத்த மாதர் சங்கங்கள், சிறுசேமிப்பு, தையல்பயிற்சி, கலைவலி விழிப்புணர்வுக்கல்வி, குடும்பமேலாண்மை ஆகிய வழிகளில் பயிற்சிகள் அளித்து மக்களை வழிநடத்தினார். அரசிடமிருந்து எலாம் பெண்களுக்கான திருமண ஊக்கத்தொகை, விதவைப்பெண்கள் ஊக்கத்தொகை ஆகியவை பெற்றுத்தரப்பட்டன. குழந்தைகளுக்கான மாலைநேரக்கல்வி குழந்தைகள்காப்பகம் போன்ற வழிமுறைகளும் செயல்படுத்தப்பட்டன.
மக்களின் உடல்நலத்தைப் பேணிப்பாதுகாக்க குறிப்பாக பெண்களின் மகப்பேற்றிற்காக அரசாங்கத்துடன் இணைந்து குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் கொடுக்க புனித கமிலஸ் மருத்துவமனை சிறப்பாக இயங்கி வருகின்றது. பண்பாடும் பொருளாதாரமும் போக்குவரத்தும் பின்தங்கியிருந்த காலத்தில் இம்மருத்துவமனை எந்த சுற்று வட்டார மக்களுக்கு மிகப்பெரிய கொடையாக திகழ்ந்தது. இம்மண்ணின் புதல்வர்களில் பெரும்பாலானோர் எம் மருத்துவமனையில் பிறந்தவர்களே. மக்களை நோய் வருமுன் காக்க மக்களை சந்தித்து கிராமங்களில் அன்றாட நோய்களுக்கான காரணங்கள், அறியாமை, உணவுப்பழக்கங்கள், மரம்நடுதல், தோட்டம் அமைத்தல் போன்ற உடல்நலக்கல்வி மற்றும் சிகிச்சை முகாம்கள் மாதந்தோறும் நடத்தப்பட்டன.
இறைமக்களின் ஆன்மீகத்தை ஆழப்படுத்த தன்னம்பிக்க்கையில் தழைத்தோங்க ,சிறார்களுக்கு மறைக்கல்வி, கோவில்பாடல்களில் பயிற்சி, மரியாயின்சேனை அதனைத் தொடர்ந்து மக்களை வீடுகளில் சந்தித்து இறைநம்பிக்கை வழங்குதல் போன்ற பணிகள் இன்றியமையாததாக செயல்பாட்டில் விளங்குகிறது.

காலத்தின் தேவைக்கேற்ப மருத்துவமனையின் விரிவாக்கமாக சில முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றது. மழலையர்களின் முன்னேற்றத்தை முனைப்பாகக் கொண்டு 1997-ல் மார்னிக் ஸ்டார் ஆங்கில மழலையர் பள்ளியும் தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் பயின்ற நம் பங்கைசார்ந்த பல மாணவிகள் உயர்நிலைப் பள்ளிகளில் முதன்மதிப்பெண்களும் அரசு இறுதித் தேர்வில் அதிகமதிப்பெண்களும் பெறுவது மிக்க மகிழ்ச்சிக்குரியது.
திருஇருதய ஆண்டவர் கெபி 1975-ல் கட்டப்பட்டதிலிருந்தே நோயாளிகளை மட்டுமன்றி ஊர்மக்கள் மற்றும் இப்பாதையில் செல்வோர் அனைவருக்குமே ஒரு அன்பின் அடையாளமாக, இறையுணர்வின் நம்பிக்கையைத் தரும் உன்னத கொடையாக விளங்குகிறது. மக்கள் தொடர்ந்து ஆண்டுக்கணக்காக தங்களது நன்றிகளை, பூ- மாலையை அர்ச்சனையாக சார்த்தி மகிழ்வது இன்றுவரை நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கின்றது.

1980-ல் மருத்துவமனை விரிவாக்கமும்
1990-ல் தூய கமிலஸ் தையல்பயிற்சி பள்ளியும்
1999-ல் இயற்கை மருத்துவம் – ஜாய் மருத்துவமனை
2001-ல் தட்டெழுத்து, நகல் எடுக்கும் பயிற்சியகம் போன்ற சிறுசிறு முன்னேற்றங்கள் நடந்த வண்ணமிருந்தன.

இயற்கை மேம்பாட்டில், உழைப்பால் ஆர்வம் கொண்டு பிரான்சிஸ்கன் சகோதரிகள் என்ற பார்ப்பரியத்தில் நன்செய் புன்செயநிலங்கள் பூ பலந்தோட்டங்களாக உருப்பெற்றன.பருவநிலைகளுக்கு ஏற்ப தனியா வகைகளும் பயிர்செய்யப்பட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன.
கடந்த பதினைந்து ஆண்டுகளில் இம்மொளச்சூர் மண் வரலாறு எண்ணாத திருப்பத்தை தன்னகத்தே கைப்பற்றிக்கொண்டது பண்பாட்டு, பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்கள் இம்மண்ணை வெகுவாக முன்னேற்றியது. கல்வியில், பண்பாட்டில் மாற்றம் விவசாயம் மிகவும் நலிவடைந்து அனைத்தும் தொழிற்சாலைகளாகவும் அதன் தொடர்பான மற்றத் தேவைகளையும் நிறைவுசெய்யத் தொடங்கின. கிராமத்தின் தோற்றம், அழகு, தூய்மை, உணவுப்பொருட்களின் தரம் என்று எல்லாமே தன் நடையை / உருவை இழந்தன. பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு இம்மண்ணில் பல வளர்ச்சிகளையும் சில பின்னடைவுகளையும் ஏற்படுத்திவிட்டன.

உழைப்பில் ஏற்பட்ட மாற்றம் உடல்நலத்தில் மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகத் தோன்றுகிறது. நோய்களின் தரமும் இதனுடன் சேர்ந்து பின்னலிட்டது மனஇறுக்கம், இருதயநோய், நீரிழிவுநோய், மூட்டு உபாதைகள் சிறுநீரக நோய்கள்,அறுவைசிகிச்சைகள் என மிகப்பெரியப் பாதிப்புகளை ஏற்படுத்தின. அடுத்த தலைமுறையினர் படிப்பிற்காக மற்ற நகரங்களுக்கு செல்லுதல், வேலைவாய்ப்புக்காக அயல்நாடுகளுக்குச் செல்லுதல் நம்மண்ணில் நிரந்தரமாகிவிட்டது. இதனால் மக்களின் வாழ்வில் தனிமை, இறுக்கம் அதிகரித்து குடும்பக்கட்டமைப்பில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இச்சூழலில் மாணாக்கர்களின் கல்விநிலை, பெண்களின் நிலை உயர்த்த அடைக்கல அன்னை செவிலியர் கல்லூரியும் இப்பெண்களுக்கான விடுதியும் 2014-ல் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இயங்கிவருகிறது. அவசரக்கால தேவையில் மக்களுக்கு துணைநிற்க மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக முன்னேற்றம் பெற அறுவைசிகிச்சைக்கூடம் (Oparation theatre), அவசரப்பிரிவு (Emergency),ICU, Private rooms, lab, Ultra Sound, X-ray, Physiotherapy மேலும் சிறப்பு மருத்துவர்களிடம் சிகிச்சைபெற வெளிநோயாளி கூடங்கள் (O.P.D) என பல்வேறு மாற்றங்களோடு புனித அடைக்கல அன்னை மருத்துவமனை என பெயர் மாற்றம் பெற்றது இந்த விரிவாக்கப்பட்ட மருத்துவமனை கட்டிடம் 11.06.215 அன்று ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெருமாள், மொளச்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.எஸ்.ஆர். டோமினிக் மற்றும் வார்டு கவுன்சிலர் திரு.ஜோசப் இவர்களின் முன்னிலையில் எமது சபைத் தலைமை அன்னை அவர்தம் ஆட்சிக்குழுவினர் தலைமையில் பங்குத்தந்தையர் இணைந்து செலுத்திய திருப்பலியுடன் எளிமையான முறையில் திறந்துவைக்கப்பட்டது.

மக்களின் பணிகளான அன்பியப்பணிகள் முதியோருக்கு மேலும் உடல்நலன் குறைந்தோருக்கு நற்கருணை வழங்குதல் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.நம் ஊர் மக்களின் விசுவாசம் செபப்பற்று திருவழிபாட்டில் ஆர்வம், உறவுகளின்மேல் அக்கறை இறப்பு நடைபெற்ற வீட்டில் தெடர்ந்து செபித்து, பிரிவால் துயருற்றோர்க்கு ஆறுதலும் ஆன்மாவை இறைவனிடம் சேர்ப்பித்து போன்ற உயரிய பண்புகள்,விழுமியங்கள் என்றும் போற்றுதற்குரியவையாகும். தூய வளனாரைப் பாதுகாப்பாகக்கொண்ட இத்தலத்தில் கால்பதித்த நாள்முதல் இன்றுவரை இறைவனின் பராமரிப்பு பங்குத்தந்தையர்களின் ஒத்துழைப்பும் நம் ஊர்மக்களின் அரவணைப்பும் என்றும் எம்முடன் இருப்பதற்காக எல்லாம்வல்ல மூவொரு இறைவனுக்கு கரம்கூப்பி நன்றி கூறுகிறோம். இந்த பவளவிழா ஆண்டில் இறைவன் நம் பங்குத்தளத்தை நிறைவாக ஆசிர்வதிக்க செபிக்கிறோம். அனைவருக்கும் பவளவிழா ஆண்டின் சிறப்பு நல் வாழ்த்துக்கள்!

அருட்கன்னியர்
அடைக்கல அன்னை சபை, மொளச்சூர்.